ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகியவற்றை இந்தியா எப்போதும் உயர்த்திப் பிடித்து வருகிறது. இந்நிலையில், இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
காஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது?
சுதந்திரம் பெற்ற பிறகு பல மாகாணங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போதிலும், காஷ்மீருக்கு மட்டும்தான் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்தியாவுடன் இணைந்த அத்தனை பகுதிகளிலும் பெரும்பான்மையினர் இந்துக்களாக இருந்தனர். ஆனால், காஷ்மீரில் மட்டும் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் இருந்தனர். எனவே, அவர்களின் உரிமைகளை எதிர்காலத்தில் யாரும் பறித்துவிடக் கூடாது என்பதற்காக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
காஷ்மீர் பிரச்னைக்கு நேரு காரணமா?
காஷ்மீர் பிரச்னைக்கு முழு முதல் காரணம் நேருவின் தவறான கொள்கையே என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், காஷ்மீர் இன்று இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதற்கு காரணம் நேருவின் கொள்கையே ஆகும். காஷ்மீரை பாகிஸ்தானுக்கு அளித்துவிட்டு, ஹைதராபாத் மாகாணத்தை இந்தியாவுடன் வைத்துக் கொள்வதே சர்தார் வல்லபாய் படேலின் விருப்பமாக இருந்தது. அப்போது, மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த ஷேக் அப்துல்லாவின் நம்பிக்கையைப் பெற்று காஷ்மீர் மக்களிடையே இந்தியாவின் மீதான மதிப்பை உருவாக்கியது நேருதான்.
பின்னர், நேருவின் முயற்சியால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. இணைப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது அதற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து. இதனைத் தொடர்ந்தும், பிரச்னை வலுத்ததால் இதற்கு தீர்வு காணவே அமைச்சரவையின் முடிவுபடி ஐக்கிய நாடுகள் சபைக்கு காஷ்மீர் விவகாரத்தை நேரு எடுத்துச்சென்றார். இந்த முடிவை எடுத்த அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் ஒருவர் ஜன சங்கத்தை தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜி ஆவார்.
அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான தாக்குதலா?
இந்திய அரசியலமைப்பு சட்டம் 3ஆம் பிரிவின் கீழ், ஒரு மாநிலத்தின் பெயரையோ, அல்லது நிலத்தின் அளவையோ மாற்றியமைக்க வேண்டுமானால், அந்த மாநிலத்தின் சட்டப்பேரவையின் அனுமதி பெறவேண்டும். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைக்கப்பட்ட நிலையில், ஆளுநரின் அனுமதியை கொண்டே இந்த முடிவை பாஜக எடுத்துள்ளது.
யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாற்றப்படுவதுதான் வழக்கம். ஆனால், வரலாற்றில் முதன்முறையாக ஒரு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதை, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான தாக்குதலாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், அமைதி திரும்பிய பிறகு மீண்டும் காஷ்மீர் மாநிலமாக மாற்றப்படும் என்கிறது மத்திய அரசு.
பலனளிக்குமா நடவடிக்கை?
2014ஆம் ஆண்டு 222ஆக இருந்த பயங்கரவாத தாக்குதல்கள் 2018ஆம் ஆண்டு 614ஆக உயர்ந்தது. 2014ஆம் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை 47 ஆகும். ஆனால், 2018ஆம் ஆண்டு இது 91ஆக உயர்ந்துள்ளது. 2014ஆம் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 28 வெகுஜன மக்கள் உயிரிழந்தனர். ஆனால், இந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு 38ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காஷ்மீருக்குப் பலனளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.