தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு அதிகமானவர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக டெல்டா உள்பட மத்திய மாவட்டத்தினருக்கு திருச்சி விமான நிலையம் மிகப்பெரிய வசதியாக அமைந்துள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு விமானங்கள் திருச்சியிலிருந்து இயக்கப்பட்டுவந்தாலும் சவூதி உள்ளிட்ட சில அரபு நாடுகள், நாட்டின் தலைநகர் டெல்லிக்கு இடையே நேரடி விமான சேவை இல்லை என்ற ஏக்கமும் மத்திய மாவட்ட மக்களுக்கு உள்ளது.
இந்தச் சூழலில்தான் தம்மமுக்கும் திருச்சிக்கும் இடையே நேரடி விமான போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு கார்த்தி சிதம்பரம் அனுப்பிய கடிதத்தில், "திருச்சிக்கும் தம்மமுக்கும் இடையே நேரடி போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என்று எனது தொகுதி மக்கள் கோரிக்கைவிடுத்த வண்ணம் உள்ளனர்.
சவூதி செல்ல விரும்பும் எனது தொகுதி மக்கள் தற்போது இலங்கையின் கொழும்பு விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து இன்னொரு விமானம் பிடித்து தம்மமுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
எனவே, மக்களின் வசதிக்காக திருச்சிக்கும் தம்மமுக்கும் இடையே விமான போக்குவரத்து சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தனியார் விமான போக்குவரத்துத் துறை நிறுவனங்களுடன் பேசி மத்திய அரசு ஒரு முடிவை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் டெல்லி வந்திருந்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஹர்தீப் சிங் புரியை நேரில் சந்தித்து கோவையிலிருந்து அரபு நாடுகளுக்கு விமான போக்குவரத்து சேவை தொடங்க வலியுறுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: தேவசேனாக்களுக்கு காவலன் செயலி... பாகுபலியாக மாறிய பெரம்பலூர் காவல் துறை!