ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வயதையும் உடல்நிலையையும் காரணம்காட்டி ப.சிதம்பரம் கோரிய ஜாமீன் மனு இருமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி வரை அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ப. சிதம்பரத்தை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் திகார் சிறையில் சென்று சந்தித்து, நலம் விசாரித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து திகார் சிறையில் தனது தந்தை ப. சிதம்பரத்தை சந்தித்துவிட்டு திரும்பிய கார்த்தி சிதம்பரம், "இன்று என் தந்தையைச் சந்தித்து ஆதரவு அளித்ததற்கு, என் தந்தையும், எங்கள் குடும்பமும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கும் நன்றியுடன் இருப்போம். அரசியல் சண்டையில் இருந்து எங்களை மீட்டெடுக்க இந்த சந்திப்பு உற்சாகம் அளிக்கும்" என்றார்.