சீனாவில் தொடங்கிய கரோனா தொற்று தற்போது உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்திவருகின்றது. உலக அளவில் பல லட்சத்துக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கரோனா இதுவரை பல லட்சம் பேரை பலிவாங்கியுள்ளது. உலக அளவில் பாதிப்பு வரிசையில் 4ஆம் இடத்தில் இந்தியா உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 7500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இதில் 94 பேர் உயிர் இழந்துள்ளனர். நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மருத்துவ சோதனையை அதிகரிக்க உள்ளதாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த இரண்டு வாரங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேருக்கு கரோனா மருத்துவச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநிலத்தில் 71 கரோனா ஆய்வகங்கள் உள்ளன எனவும் அவற்றில் 41 அரசு, 30 தனியார் ஆய்வகங்கள் ஆகும் எனவும் கூறியுள்ளார்.