கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாநில எல்லைகளும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. ஆனால், அவசர கால வாகனங்களுக்கும், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், கேரளாவில் வந்த ஆம்புலன்ஸுக்குக் கூட எல்லையைத் திறப்பதற்கு கர்நாடாக காவல் துறை மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸால் மக்களின் இதயம் கல்லாக மாறியுள்ளதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு கூறமுடியாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கேரளா மாநிலம் மஞ்சேஷ்வரைச் சேர்ந்தவர் மாதவா (45), கும்பலா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு தொடர்பாக சிகிச்சைப் பெற்று வந்தார். இவரின் நிலைமை மோசமாக காணப்பட்டதால் மேல் சிகிச்சைகாக மங்களூர் மருத்துவமனை அல்லது பரியாரம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரைத்தது.
இதையடுத்து, ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்ற நோயாளியை அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக எல்லையில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த சமயத்தில் நோயாளியின் உடல்நிலை மோசமானதால், உடனடியாக மீண்டும் காசர்கோடு பகுதிக்கே அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், பாதி வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இதே போல், கேரளாவில் குஞ்சத்தூர் பகுதியைச் சேர்ந்த ஈஷா, உப்பலா மருத்துவமனையில் சுவாச பிரச்சனை தொடர்பாக சிகிச்சைப் பெற்று வந்தார். இவரும் மேல் சிகிச்சைகாக மங்களூரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், இவரின் ஆம்புலன்ஸூக்கும் கர்நாடக காவல் துறை "நோ சிக்னல்" காட்டியதால் திரும்பி வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதன்காரணமாக, இவரும் பாதி வழியில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், மனிதாபிமானம் எங்கே சென்றது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். அவசர கால ஊர்தியை கர்நாடக எல்லையில் இருந்த காவல்துறையினர் அனுமதிக்காதது குறித்து விசாரணை நடத்தி, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:சிறையில் கைதிகள் ஒன்றுக் கூடி ஆர்ப்பாட்டம் - வைரலாகும் வீடியோ