கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடன் பணிபுரிபவர் தன்னைப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாகக் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர், பெங்களூரு நீதிமன்றத்தில் முன்ஜாமின் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், பெங்களூரு நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ததால், அடுத்தப்படியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்நிலையில், இவ்வழக்கானது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ”புகார் செய்த பெண்தான் அந்த நபரைப் பணி நியமனம் செய்துள்ளார். இந்நிகழ்வு நடைபெற்ற தேதியில் இரவு 11 மணிக்கு எதற்காக ஒருவருடன் காரில் அப்பெண் நிறுவனத்திற்குச் செல்ல வேண்டும்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபருடன் எதற்கு மது அருந்த வேண்டும். திருமணம் செய்துகொள்ளும் ஆசையில்தான் நெருக்கமாக இருந்துள்ளார். ஆபத்தானவர் என்று நினைத்தால் முன்பே எச்சரித்திருக்கலாமே. இதுமட்டுமின்றி அசதியில் காலை வரை உறங்கிவிட்டு பொறுமையாக அடுத்த நாள் புகாரளிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இது இந்தியப் பெண்களிடம் பார்க்க முடியாத செயல்” எனச் சரமாரியாகக் கேள்வியெழுப்பினார். இதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு முன்ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தார்.