கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்தனர். அப்போது முதல் மாநிலத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவிவருகிறது.
இந்நிலையில் இன்று காலை கூடிய கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம் காலை முதல் நடைபெற்றது. அப்போது பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, "ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சினர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழுத்தம் தரக் கூடாது" என்று கோரிக்கை விடுத்தார்.
அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் சித்தராமைய்யா, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் விவாதம் செய்தனர். பின்னர் இன்று மதியம் ஜெகதீஸ் ஷெட்டர் தலைமையிலான பாஜகவினர் அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக பேசினர்.
இதை தொடர்ந்து மாலை சட்டப்பேரவை தொடங்கி நடைபெற்றது. அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை சிறப்பு அலுவலர் மூலமாக சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஆளுநர் அனுப்பினார்.
ஆளுநர் அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் படித்தபோது அங்கிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.