கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி கொட்டி தீர்த்துவரும் கன மழையால் 17 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வெள்ள நீரிலும், நிலச்சரிவிலும் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேரை காணவில்லை.
அம்மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ள 924 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடும் வெள்ளத்தில் 21,431 வீடுகள், நான்கு லட்ச ஹெக்டர் பயிர்கள் சேதமாகிவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் வெள்ள நிவாரண நிதியாக மூவாயிர கோடியை மத்திய அரசிடம், கர்நாடக அரசு கேட்டுள்ளது.
பெல்கம் உள்ளிட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் சென்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று பார்வையிட்டனர். கடந்த சனிக்கிழமையன்று பெலாகவி, பாகல்கோட் உள்ளிட்ட பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். நிலச்சரிவு காரணமாக பெங்களூரு-மங்களூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நாளை(ஆகஸ்ட் 12) வரை மூடப்படுகிறது.