பெங்களூரு (கர்நாடகம்): 2019ஆம் ஆண்டு சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்ஷா குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் நடிகர் அஜித் குமார். அதன் மூலம் ஆளில்லா விமானங்களை உருவாக்க மாணவர்களுக்கு உதவினார்.
அஜித்தின் வழிகாட்டுதலில் 'தக்ஷா' அணியின் ட்ரோன் (ஆளில்லா விமானம்) நீண்ட நேரம் வெற்றிகரமாகப் பறந்து சாதனை படைத்தது. மேலும் பெங்களூருவில் நடந்த ட்ரோன் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொண்டு பரிசுகளை வென்றது.
தற்போது இந்த தக்ஷா அணியின் உதவியுடன் தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் தொடர்புடைய மருத்துவர் கார்த்திக் நாராயண் இந்தத் தகவலை, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் நடிகர் அஜித்தின் தக்ஷா குழு!
இதனிடையே இந்தப் பணியை கர்நாடகாவிலும் தொடங்கியுள்ளனர் இக்குழுவினர். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்ட கர்நாடகா துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண், தக்ஷா குழுவுக்கு தனது நன்றி கலந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டர் பதிவில், "கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த, பெரிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க, கிருமிநாசினி ட்ரான் வழியாக ஒரு வழியை உருவாக்கியதற்கு, திரை நட்சத்திரம் அஜித்குமாரின் வழிகாட்டுதலில் செயல்பட்ட ‘தக்ஷா’ அணியினருக்குப் பாராட்டுகள். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்தது.