கர்நாடக மாநிலத்தில் கர்நாடக காங்கிரஸ் பிரதேஷ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட டி.கே. சிவக்குமார் பதவியேற்பு விழாவை வரும் ஜுன் 14ஆம் தேதி நடத்த அனுமதி வழங்கக்கோரி கடந்த ஜூன் 5ஆம் தேதி முதலமைச்சர் பி.எ.ஸ் எடியூரப்பாவிற்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதில் அவர், சுமார் 150 காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அக்கட்சியின் தொண்டர்கள் பத்து லட்சம் பேர் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு ஜுன் 30ஆம் தேதிவரை அமலில் உள்ளதை காரணம் காட்டி, இந்த விழாவில் அதிகம்பேர் ஒன்று கூடுவதற்கு அம்மாநில அரசு தடைவித்துள்ளது. மேலும் 50 பேர் கூடுவதற்கு மட்டும் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் குறிப்பிட்ட தேதியில் பதிவியேற்பு விழா குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களை கொண்டு நடைபெறும் என்று அம்மாநில காங்கிரஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகவில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அதற்கு பொறுப்பேற்று கட்சியின் அப்போதைய தலைவராக இருந்த தினேஷ் குண்டு ராவ் பதவி விலகியதையடுத்து கடந்த மார்ச் 11ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் இடைகால தலைவர் சோனியா காந்தி, டி.கே. சிவக்குமாரை கர்நாடக மாநிலத்தின் தலைவராக நியமித்தார்.
முன்னதாக கடந்த மே 31, ஜூன் 7 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த அவரின் பதவியேற்பு விழா முழு ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகப்போரின்போது கூட இப்படிப்பட்ட ஊரடங்கு இருந்திருக்காது - ராகுல் காந்தி சாடல்