நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சம் ஏற்படத் தொடங்கியதிலிருந்து வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
கடந்த மார்ச் மாதம் முதல் அரசுகள் மக்களை பாதுகாக்கும் முயற்சியில் தற்போதுவரை செயல்பட்டுவருகிறது. இதற்கிடையில், கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது.
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பிற நபர்களுக்கு பரவுவதைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் கரோனா பரிசோதனைகளை விரைந்து நடத்த மாநில அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, மார்ச் 23ஆம் தேதி முதல் கர்நாடக அரசு மக்களிடம் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டது. அச்சமயத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநில அரசுக்கு குறைந்தது 99 நாள்கள் தேவைப்பட்டதாகத் தெரிகிறது.
ஆனால் தற்போது பிசிஆர் பரிசோதனைக் கருவிகள், ஆன்டிஜென் பரிசோதனைக் கருவிகளின் உதவியோடு இரு நாள்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள 101 ஆய்வகங்களில் நாளொன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகள் செய்யப்படுகின்றன. அதன்படி, மார்ச் 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதிவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகளை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.
இது நாட்டின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகப்படியான சோதனை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகா மார்ச் மாதத்தில் வெறும் இரண்டாயிரத்து,309 கரோனா பரிசோதனைகளை மட்டுமே மேற்கொண்டது. பின்னர், ஏப்ரல் மாதத்தில் சோதனைகளின் எண்ணிக்கை 55 ஆயிரத்து, 21ஆக அதிகரித்தது. தொடர்ந்து மே மாதத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கை 2.4 லட்சமாகவும், ஜூன் மாதத்தில் 3.2 லட்சமாகவும், ஜூலை மாதத்தில் 7.6 லட்சமாகவும் அதிகரித்து அவை தற்போது ஆகஸ்ட் மாதத்தின் முதல் 16 நாள்களில் 6.8 லட்சமாக அதிகரித்துள்ளது.
கிட்வாய் பெங்களூர் பகுதியில் 1.05 லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாநிலத்தில் அதிகளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் ஆய்வகங்களும் ஆகஸ்ட் 16 வரை 4.5 லட்சம் பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளதாக துகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளன.
நேற்று( ஆகஸ்ட் 19) கர்நாடகா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை எண்ணிக்கையின்படி, மொத்தம் 21.3 லட்சம் பேர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதில் 5.5 லட்சம் விரைவான-ஆன்டிஜென் சோதனைகள் மூலமும், 15.8 லட்சம் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் பிற சோதனை முறைகள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ஏழாயிரம் பேர்வரை தொற்றினால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தற்போதுவரை,தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.4 லட்சமாக உள்ளது. அவர்களில் தற்போது 79 ஆயிரத்து 782 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.