திருவனந்தபுரம் கரமனா பகுதியில் வாழ்ந்துவந்த கூடத்தில் என்ற குடும்பத்தின் உறுப்பினர்கள் ஏழு பேர் கடந்த 1991ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு காலகட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அக்குடும்ப சொத்துக்களை அபகரித்தது தொடர்பாக முன்னாள் மாவட்ட ஆட்சியர், குடும்ப பொறுப்பாளர் உட்பட 12 பேர் மீது குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த கூடத்தில் என்ற குடும்பத்தின் உறுப்பினர்கள் ஏழு பேர் 1991ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை ஒருவர் பின் ஒருவராகச் சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமடைந்தனர்.பல வருடங்களாக இக்குடும்பத்தின் கவனிப்பாளராக இருந்தவர் ரவீந்திரன் நாயர்.
அவர், கூடத்தில் குடும்பத்தினரின் 30 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாக, புகார் எழுந்தது. சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த உன்னிகிருஷ்ணன் நாயரின் மனைவி பிரசன்ன குமாரி அளித்த புகாரில் காவல் துறையினர் வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
கணவரின் உறவினர் மீது ஆசை... குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளம்பெண்! #மட்டன்சூப்_கொலைகள்
இதனையடுத்து, இவ்வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகத் தொடங்கின. அதில் இக்குடும்பத்தின் கவனிப்பாளராக இருந்த ரவீந்திரன், கூடத்தில் குடும்ப சொத்துக்களை அபகரித்து வேறு நபர்களின் பெயர்களில் பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேம்பட்ட விசாரணையில் முன்னாள் மாவட்ட ஆட்சியருக்கும் இதில் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் உட்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மரணம் தொடர்பான பல மர்மங்களும் விசாரணையின்போது விலகும் என்று கருதப்படுகிறது. கேரள மாநிலத்தில் சொத்துக்காகச் சொந்த வீட்டினர் ஆறு பேரை, ஆட்டுக்கால் சூப்பில், சையனைட் விஷம் கலந்து ஜோலி என்ற பெண் கொலை செய்த சம்பவத்தின் சுவடு இன்னும் மறையாத நிலையில், இந்த வழக்கு கேரள மக்களிடையே பெரும் பேசுபொருளாகி இருக்கிறது.