நாட்டில் இரண்டாவது முறை ஆட்சியமைத்த பாஜக அரசு தங்களின் ஓராண்டு காலத்தை நிறைவு செய்திருக்கிறது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அக்கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான கபில் சிபல் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.
கபில் சிபல் கூறியதாவது, "பாகுபலி பிரதமராலேயே கரோனாவை எதிர்கொள்ள முடியாமல் நாட்டை மிகவும் மோசமான இடத்திற்கு கொண்டு வந்துவிட்டார். அது மட்டுமில்லாமல், பாஜக அரசு சமூக இடைவெளியை ஏழை மக்கள் மத்தியில் காட்டிவருகிறது.
ஏழை மக்களின் வாழ்க்கை தரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதைக் காட்டிலும்; அவர்கள் பெருமையாக கூறிக்கொள்ளும் என்.பி.ஆர், அயோத்தியா வழக்கு, முத்தலாக் உள்ளிட்டவற்றில்தான் அதிக கவனத்தைக் காட்டியுள்ளது.
மேலும் எல்லையில் நடக்கும் பிரச்னையைப் பற்றி வெறும் செய்தியாக மட்டும் கூறாமல், உண்மையில் அங்கு நடக்கும் நிலவரங்களை நாட்டு மக்கள் முன் பிரதமர் எடுத்துக் கூற வேண்டும்.
இந்தியாவை 'உலகத் தலைவராக' மாற்றியதாக நரேந்திர மோடி பெருமை தெரிவித்திருந்தார். ஆனால் எந்த உலகிற்கு? ஒருபுறம் சீனாவுடனான எல்லைத் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; மறுபுறம் நேபாளத்துடன் பிரச்னை இருப்பதை ஏன் பிரதமர் கவனிக்கவில்லை?" என்றும் கேள்வியெழுப்பி உள்ளார்.
தொடர்ந்து பேசிய கபில் சிபல், "புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. பசி, பட்டினியோடு அவர்கள், தங்கள் ஊர்களுக்கு நடைபாதையாக செல்வது, இந்த அரசின் அக்கறையின்மையைக் காட்டுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிரதமர் நிதியில் வரும் பணத்தை எவ்வளவு நரேந்திர மோடி செலவு செய்துள்ளார் என்பதை அவரால் கூற முடியுமா?" எனவும் வினவியுள்ளார்.
இதையும் படிங்க: ஜுன் 14இல் எதிர்பார்க்கப்படும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்