உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை மாதம் சிவன் பக்தர்களால் கன்வர் யாத்திரை என்றழைக்கப்படும் புனித யாத்திரை நடைபெறும். இவர்கள் பாபா தாமில் உள்ள பைத்யாநாத் ஜோதிர்லிங் கோயிலுக்குச் சிறிய பானைகளில் கங்கை நீரினை சுமந்துச் சென்று வழிபடுவர். ஜூலை 23ஆம் தேதியன்று தொடங்கிய இந்த யாத்திரை ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், யாத்திரையின்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டிருந்த விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விடுப்பில் உள்ள காவலர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு காவல் தலைவர் அசோக் குமார் கூறுகையில், ஹரித்வாரில் இதுவரை சுமார் 1.5 கோடி பக்தர்கள் ஹரித்வார், கோமுகம், கங்கோத்ரி, பிகாரின் சுல்த்கஞ்ச் பகுதியிலிருந்து கங்கை புனித நீரை எடுத்துக்கொண்டு சிவனுக்கு படைத்துள்ளனர்.
இப்புனித பயணத்தில் தொலைந்துபோன மக்களுக்கு உதவ நாங்கள் ஒரு சிறப்பு முகாமை அமைத்துள்ளோம். குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து பிரிந்த 616 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுடன் சேர்த்து வைத்துள்ளோம். மேலும், 20 வெவ்வேறு இடங்களில் பேரிடர் நிவாரண குழுக்களை அமைத்துள்ளோம். இதுவரை கங்கை நீரில் மூழ்கிய 41 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதியான பயணத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தேவைக்கேற்ப உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.