உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் நிழல் உலக தாதா விகாஸ் துபே. இவரை பிடிப்பதற்காக ஜூலை 2ஆம் தேதி இரவு 50 பேர் கொண்ட காவல் துறை குழு, அவர் பதுங்கியிருந்த இடத்துக்குச் சென்றது. இதையறிந்த விகாஸ் துபே, அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து தன்னை பிடிக்க வந்த காவல் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், சர்கில் அலுவலர் தேவேந்திர மிஷ்ரா உள்பட எட்டு காவல் துறையினர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், தலைமறைவாக உள்ள விகாஸ் துபே, அவரது கூட்டாளிகளைக் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், விகாஸ் துபே கூட்டாளிகளின் புகைப்படங்களை கான்பூர் காவல் துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதனிடையே, கான்பூர் ஐஜி மோகித் அகர்வால் பேசுகையில், "சவ்பேபூர் காவல் நிலையத்தில் உள்ள அத்தனை பேரையும் விசாரணை வலையத்தில் கொண்டு வந்துள்ளோம்" என்றார்.
அதேபோன்று உத்தரப் பிரதேச கூடுதல் காவல் துறைத் தலைவர் (சட்டம் - ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறுகையில், "விகாஸ் துபே, அவரது கூட்டாளிகளைப் பிடிக்கும்வரை ஓயமாட்டோம். இதற்காக 40 தனிப்படை, சிறப்புப் படையினர் களமிறங்கப்பட்டுள்ளனர். விகாஸ் துபேவின் கூட்டாளிகள், குடும்பத்தினர் குறித்த தகவல்கள் சேகரித்து வருகிறோம். அவரது வீட்டை சோதனையிட்டதில், இரண்டு கிலோ எடையுள்ள வெடி பொருள்கள், நாட்டு துப்பாக்கிகள், 15 க்ரூட் வெடிகுண்டுகள், 25 கேட்ரிட்ஜுகள் மீட்கப்பட்டன" என்றார்.
இந்தச் சம்பவத்தில் பல காவல் துறையினருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே, சவ்பேபூர் காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் ஸ்டேஷன் ஹவுஸ் அலுவலரான வினய் திவாரி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விகாஸ் துபே குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 2.5 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விகாசின் புகைப்படம் அடங்கிய சுவரொட்டிகள் ஊனோ சுங்கச் சாவடியிலும், இந்தியா - நேபாளம் எல்லை அருகே உள்ள லகிம்பூரி மாவட்டத்திலும் ஒட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : சித்த மருத்துவத்துற்கு ஏன் தனியாக எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை ? - உயர் நீதிமன்றம் கேள்வி!