தெலங்கானாவிலிருந்து மதுபாட்டில்களைக் கடத்திச்சென்று ஆந்திராவில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, கரோனா நெருக்கடி காலக்கட்டத்தில் இந்தக் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தடுக்க ஆந்திரா காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம் ஜாகயபேட்டா கிராமத்திலிருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்திச் செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சிறப்பு அமலாக்க பணியகத்தின் கூடுதல் கண்காணிப்பாளர் வகுல் ஜிண்டால் தலைமையிலான காவல் துறையினர் விரைந்துசென்று ஜாகயபேட்டாவில் காரை மடக்கிப் பிடித்து சோதனைசெய்தனர்.
அந்தச் சோதனையில் காரின் உள்ளே அட்டைப் பெட்டிகள், சீட்டின் அடிப்பகுதியில் மது பாட்டில்களை மறைத்து கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. காரின் ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவரது பெயர் சிவா என்பதும் அவர் ஆந்திராவிலிருந்து காரில் மது பாட்டில்களைக் கடத்திவந்ததும் தெரியவந்தது.
மேலும், அந்தக் கார் விஜயவாடாவின் புகழ்பெற்ற கனக துர்கா கோயிலின் அறக்கட்டளை உறுப்பினர் சி. வெங்கட நாக வரலட்சுமிக்குச் சொந்தமானது என்பதும் கண்டறியப்பட்டது.
இந்தச் செய்தி விஜயவாடா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக, சி. வெங்கட நாக வரலட்சுமி தனது அறக்கட்டளை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது ராஜினாமா தொடர்பாக அறக்கட்டளையின் தலைவர் பைலா சோமி நாயுடு, அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "எனக்கும் அந்தக் கடத்தல் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனக்குத் தெரியாமல் மதுபாட்டில்கள் (தெலங்கானாவிலிருந்து) கொண்டுவரப்பட்டுள்ளது. அது முற்றிலுமாக ஓட்டுநரின் தவறு. இந்த வழக்கு விசாரணை முடியும்வரை நான் ராஜினாமா செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சிறப்பு அமலாக்க பணியகத்தின் கூடுதல் எஸ்.பி. வகுல் ஜிண்டால் கூறுகையில், "வரலட்சுமியின் கார் பெரும்பாலும் அண்டை மாநிலத்திற்குச் சென்று மதுபானம் வாங்கி வர பயன்படுத்தப்பட்டு வருவதாகவே தெரிகிறது. எனவேதான் அடுத்தடுத்த அவரது வாகனம் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் பிரசாத்திற்கு, இந்தச் சம்பவத்துடன் எந்தச் தொடர்பும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வரலட்சுமியின் மகன் சூர்யா, கார் ஓட்டுநர் எஸ். சிவா உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.