கர்நாடக மாநிலத்தில் மங்களூரு, உடுப்பி பகுதியில் பாரம்பரியமான கம்பாலா ரேஸ் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. சகதி நிறைந்த 100 மீட்டர் கொண்ட ஓடுகளத்தில், எருமை மாடுகளைக் கட்டிக் கொண்டு வீரர்கள் இரு புறங்களில் இருந்து ஓடுவர். கடந்தாண்டு, கம்பலா ரேஸில் மங்களூருவைச் சேர்ந்த சீனிவாச கவுடா, 100 மீட்டர் தொலைவை 9.55 நொடியில் கடந்து வெற்றி பெற்றார். இவர் மின்னல் வேக தடகள வீரரான உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்திருந்தார்.
100 மீட்டர் தொலைவை வெறும் 9.58 நொடிகளில் உசைன் போல்ட் கடந்த நிலையில், சீனிவாச கவுடா 9.55 நொடிகளைப் பதிவு செய்து அசத்திருந்தார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில், தன்னுடைய சாதனையை அவரே முறியடித்து மீண்டும் மிரட்டியிருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இகலாபாவாவில் (Ikala Bava) நடைபெற்ற ஒரு கம்பாலா ரேஸில், 11.64 வினாடிகளில் 125 மீட்டர் தூரத்தை சீனிவாச கவுடா கடந்து தனது சாதனையை முறியடித்துள்ளார். கணக்கிட்டதில், அவர் 100 மீட்டர் தூரத்தை 9.31 வினாடிகளில் கடந்துள்ளார்.