புதுச்சேரி சட்டப்பேரவை தலைவராக திறன்பட செயல்பட்டுவந்தவர் வைத்திலிங்கம். இவர் புதுச்சேரி மாநகர காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செயய்ப்பட்டவர் ஆவார். இவர் ஏற்கனவே அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டவர்.
பின்னர் சபாநாயகராய் சிறப்பாக செயல்பட்டுவந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை, அப்போது துணை சபாநாயகராய் இருந்த சிவக்கொழுந்துவிடம் வழங்கினார்.
புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றார். இந்நிலையில் வைத்திலிங்கம் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர், புதிய சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வழங்கினார். தொடர்ந்து அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னர் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி காலியானதாக புதுவை சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்தார். இது தொடர்பான தகவலையும் அவர் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளார். ஆகவே அடுத்த 6 மாதத்திற்குள் காமராஜர் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.