மத்தியப் பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தற்போது கவிழும் நிலையில் உள்ளது. அதிருப்தி காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா, அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் விலகி தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.
அதில், ஆறு அமைச்சர்களின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட அவைத் தலைவர், மீதமுள்ள 16 உறுப்பினர்களின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்திவந்தார். அதிருப்தி உறுப்பினர்களைச் சமதானம் செய்ய திக்விஜய சிங் பெங்களூரு சென்ற நிலையில், அங்கு அவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று மாலைக்குள் மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஆட்சி கவிழ்வது கிட்டத்தட்ட உறுதியானதையடுத்து, 16 உறுப்பினர்களின் ராஜிநாமா கடிதத்தை அவைத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
முதலமைச்சர் கமல் நாத் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக நண்பகல் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். அப்போது, அவர் தனது ராஜிநாமா அறிவிப்பை தெரிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து மத்தியப் பிரதேச முதலமைச்சராக மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 17 வயதில் எட்டு குட்டிகளை ஈன்றெடுத்த பாண்டா கரடி!