லடாக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் 59 சீன செல்போன் செயலிகளுக்கு மத்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தடை விதித்தது. இந்தத் தடையில் டிக் டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இடம் பெற்றிருந்தன.
இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருக்கும் சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 59ஆவது பிரிவின் கீழ் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்புகளும் விமர்சனங்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மத்திய அரசின் இந்தத் தடை நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் தற்போது ட்வீட் செய்துள்ளார். அதில் "சீனப் பயன்பாடுகளை தடை செய்யும்போது நம் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் முயற்சியுங்கள், மத்திய அரசு மீதான எங்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைய வேண்டாம். நமது துணிச்சலான வீரர்கள் சீனர்கள் தங்களது வரைபடங்களை மீண்டும் வடிவமைக்க உதவுவார்கள்". எனப் பதிவிட்டுள்ளார்.