தெலங்கானா மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களும் இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, ஹைதராபாத் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஹைதராபாத் நகரமே இருளில் தத்தளித்து கொண்டிருந்தது. கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வெள்ளப்பாதிப்பை கருத்தில்கொண்டு புதன், வியாழன் ஆகிய இரண்டு நாள்களும் தெலங்கானாவில் பொதுவிடுமுறையும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலங்கானா முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான கே.டி. ராமராவ், வெள்ளப்பாதிப்பை சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "பல இடங்களில் நீர் தேங்கி கிடப்பதால், தொற்று நோய்ப் பரவும் அபாயம் உள்ளது. நகரத்தின் முக்கியப்பகுதிகளில் மருத்துவ முகாம் அமைத்திட வேண்டும். 104 ஆம்புலன்ஸ் சேவையை அதிகரித்திட வேண்டும். ஓரிரு நாள்களுக்கு மக்கள் வெந்நீரை மட்டுமே குடித்திட அறிவுறுத்த வேண்டும்.
குளிர்காலம் தொடங்கியுள்ளதால் ஏழை மக்கள் அனைவருக்கும் போர்வைகளை வழங்கவும், தங்குமிடம் இருப்பதையும் உறுதி செய்திட வேண்டும். பாழடைந்த கட்டடங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு காவல் துறை உதவியுடன் அப்புறப்படுத்த வேண்டும். பல முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளதால், சீரமைப்புப் பணிகளை தொடங்கிட வேண்டும்' என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், 64 நிவாரண முகாம்களில் சுமார் 44 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏழைகளுக்கு 45 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் கே.டி.ராமராவ் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ஸ்ரீ சோமேஷ்குமார் ஐ.ஏ.எஸ்,முதன்மைச் செயலாளர் டி.ஆர் & பி சுனில் சர்மா, சுகாதார மற்றும் குடும்ப நலச் செயலாளர் ஸ்ரீ ரிஸ்வி, பேரழிவு மேலாண்மைச் செயலாளர் ஸ்ரீ ராகுல் போஜ்ஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.