அன்றைய இரவு தன் வாழ்க்கை முடியப் போகிறது என, அந்த 23 வயது மருத்துவ மங்கை கனவிலும் நினைத்திருக்க மாட்டாள். அவள் ஏறியது பேருந்து அல்ல, எமனின் வாகனம் என்பதையும் அவளின் கண்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கொடூர மனம் படைத்த ஆறு மிருகங்கள் மத்தியில் அவர் உயிர் துடித்தாள். அந்த மிருகங்கள் சதையை தின்றுவிட்டு எச்சில் எலும்பை தூக்கி வீசின. வெளிநாடு சென்ற போதிலும் அவள் இதயம் துடிக்கவில்லை. மக்கள் மனதை தீராத துயரத்தில் ஆழ்த்தி விட்டு மரணித்தே போனாள்.
அவளின் இழப்பு ஒட்டுமொத்த தேசத்தையும் தட்டியெழுப்பியது. தேசம் எங்கும் நிர்பயா.. நிர்பயா... என்ற அழுகுரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவளின் மரணம் லட்சோப லட்சம் பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
ஆமாம்.. அவள் செய்த குற்றம்தான் என்ன? இரவு பேருந்தில் பயணம் செய்ய அவள் கொடுத்த விலை உயிர்.!
அதன் பின்னர் விரைவு விசாரணை.. சிறை என அந்த கொடிய மிருகங்களின் காலம் கழிந்தது. அந்த நாள்களில் ஒருவன் தனக்கு தானே தண்டனையை நிறைவேற்றிக் கொண்டான். மற்றொருவனோ சிறுவன் என்பதால் விதி விலக்காகி விதி தப்பினான்.
மற்றுமுள்ள நால்வரும் சட்டத்தின் ஓட்டையை சாதகமாக்கி பயணித்தனர். ஒருவன் பின் ஒருவனாக கருணை கேட்டான். அன்று அபலை பெண்ணுக்கு இவர்கள் அளித்த கருணை திரும்பி வந்துகொண்டே இருந்தது.
இறுதியாக இறுதி உத்தரவு குறித்துவிட்டான் நீதியரசன். விரைவான நீதி கொடு என்று நாடே கூக்குரல் எழுப்பிய போதிலும் சட்ட சுரண்டலை சாதகமாக்கி ஏழு ஆண்டுகள் இழுத்துவிட்டனர்.
இறுதியாக சட்டம் தனது கடமையை செய்கிறது. தாமதம் என்ற போதிலும் நீதி மறுப்பு இல்லை.
இனியாவது அமைதி கொள் நிர்பயா.!