கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட பண்டிபுரா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி வழியாக குண்டல்பேட்டை - ஊட்டி செல்லும் பிரதான சாலை செல்கிறது. இச்சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. வனவிலங்குகள் அதிகம் உள்ளதால், வனப்பகுதியை கடக்கும் வரை மிகுந்த பாதுகாப்புடனும், விழிப்புடனும் செல்ல வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பண்டிபுரா வனப்பகுதி சாலை வழியாக இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது திடீரென சாலையை கடந்த புலி ஒன்று, இருசக்கர வாகனத்தை வேகமாக துரத்தியுள்ளது. இதைக் கண்டு பீதியில் உறையாமல், இளைஞர்கள் வாகனத்தை வேகமாக இயக்கி புலியிடம் இருந்து உயிர் தப்பினர். சிறிது தூரம் துரத்திய புலி, சட்டென்று திரும்பி வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
கண் இமைக்கும் நேரத்தில் இளைஞர்களுக்கு மரண பயத்தை காட்டிய புலியை, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர் வீடியோ எடுத்துள்ளார். இந்த திக் திக் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.