உத்தரப் பிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டத்தில் சரக்கு ரெயில் ஒன்று தடம்புரண்டது. இதுதொடர்பாக செய்தி சேகரிக்க நியூஸ்24 செய்தியாளர் அமித்ஷர்மா என்பவர் அங்கு சென்றார். அமித்ஷர்மா செய்தி சேகரிக்க ரயில்வே காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, அமித் ஷர்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரயில்வே காவல்துறை அதிகாரிகள் ராகேஷ் குமார், சஞ்சய் பவார் உள்ளிட்டோர் அமித் ஷர்மாவை சராமரியாகத் தாக்கியுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் அமித் ஷர்மாவை கைது செய்த காவல்துறையினர் ஜிஆர்பி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து அமித் ஷர்மாவின் ஆடைகளைக் களைந்து அடித்து உதைத்துள்ளனர். மேலும், வன்முறையின் உச்சமாக ராகேஷ் குமார் செய்தியாளர் அமித் ஷாவின் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
ரயில்வே காவல்துறையினர் செய்தியாளரைத் தாக்கிய சம்பவம் காட்டுத் தீ போல பிற செய்தியாளர்களுக்கு பரவியது. சம்பவ இடத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் குவிந்து போராட்டம் நடத்தினர். மேலும், பத்திரிகையாளரைத் தாக்கிய ராகேஷ் குமார், சஞ்சய் பவார் ஆகிய இருவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என ரயில்வே காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது அவதூறு பரப்பும் வீடியோவைப் பதிவிட்டதாக பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா மீது புகார் கூறி அவரை சிறையிலடைத்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து, அவரை விடுதலை செய்த சில மணிநேரங்களில் மீண்டும் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.