ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அரசியல் செயல்பாட்டாளருமான கன்னையா குமார் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்ய டெல்லி அரசு நேற்று அனுமதியளித்தது.
இதனை ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இதுதொடர்பாக ஜேஎன்யு மாணவர் சங்கம் பதிவிட்டிருந்த ட்வீட்டில், "ஜேன்யு மாணவர் சங்கம் ஆம் ஆத்மி கட்சியைக் கடுமையாகக் கண்டிக்கிறது. குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்று அனுமதியளிப்பது வெட்கக்கேடானது. கோழைத்தனமான அரசியல் என்றும் நீடிக்காது. தேர்தல் வெற்றக்காக வெகுஜன வெறியையும், பொல்லாங்கையும் ஊக்குவிக்கும் தந்திரமான அரசியல்வாதிகள் வெகுகாலம் பதவியில் இருக்கப் போவதில்லை.
ஊடகப் பசிக்கு தீணி போட போலியான காணொலிகளை வைத்து கேலிக்குரிய வழக்கில் ஒருவரைத் தண்டிக்க அனுமதிப்பது, காஷ்மீர் சிறப்புத் தகுதி (அரசியலமைப்புப் பிரிவு 370) நீக்குவதற்கு ஆதரவளிப்பது, சிஏஏ, என்ஆர்சி பிரச்னைகளில் மௌனம் காப்பது, இஸ்லாமியர்களுக்கு எதிராக டெல்லியில் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டோர் அத்தியாவசிய தேவைக்காக ஏங்கும் வேளையில் பிரார்த்தனையில் ஈடுபடுவது என ஏன் ஆம் ஆத்மி கட்சி இந்துத்துவா அரசியலின் மறுமுகமாகச் செயல்படுகிறது? இது வெட்கக்கேடான" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பிகார் சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடப்போவதைத் தடுப்பதற்காகவே டெல்லி அரசு இப்படி செய்திருப்பதாகக் கன்னையா குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2016ஆம் ஆண்டு ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தைச் சேர்ந்த கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் அந்தப் போராட்டங்களில் தேச விரோத முழக்கங்களை தொடர்ச்சியாகச் செய்ததாகவும் டெல்லி காவல் துறை குற்றப்பத்திரிக்கையில் பதிவுசெய்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லி வன்முறையை கோத்ராவுடன் ஒப்பிட்ட கல்லூரி விரிவுரையாளர் கைது