இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) மாணவர்கள் நேற்று மாலை அப்பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென அங்கு வந்த முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், மாணவர்கள் விடுதிகள், வரவேற்பு அறைகள், வாகனங்கள் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் அடித்து உடைத்தது.
இதில், ஜே.என்.யூ. மாணவ சங்கத் தலைவி அய்ஷி கோஷ், மாணவர்கள், ஆசியர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த வன்முறைச் சம்பவத்தை எதிர்த்து நாடெங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவத்தை அரங்கேற்றியது ஆர்.எஸ்.எஸ்.இன் மாணவர் சங்கமான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷாத்தைச் (ABVP) சேர்ந்த உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஜே.என்.யூ. வன்முறை சம்பவத்துக்கு தொடர்புடையதாக நான்கு பேரை டெல்லி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இந்த நால்வரும் வெளியாட்கள் ஆவர்.
பாதுகாப்புக் கருதி ஜே.என்.யூ. வளாகத்தில் நூற்றுக்கணக்கில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் இன்னும் பதிலளிக்கவில்லை.
இதையும் படிங்க : குளிர்கால விடுமுறைக்குப் பின் உச்ச நீதிமன்றம் இன்று திறப்பு