ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ், ஹசாரிபாக் என்னுமிடத்தில் நீர்பாசன வசதிக்காக 42 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த கால்வாயை திறந்துவைத்தார். அந்த கால்வாய் திறந்து வைக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பழுதடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பிகார் மாநிலமானது 1978 ஆம் ஆண்டில் பிரிக்கப்படாமல் இருந்தபோது, அன்றைய பிகார் ஆளுநர் ஜகந்நாத் கவுசால், இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், அடுத்தடுத்த அரசுகளின் அலட்சியம் காரணமாக, திட்டம் தாமதமானது. இந்தத் திட்டத்தின் செலவு ஆரம்ப நிலையில் ரூ. 12 கோடியாக இருந்தது. ஆனால், முடியும்போது ரூ. 2, 500 கோடியாக அதிகரித்தது.
அதன்பின், 2003 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் அர்ஜுன் முண்டா மீண்டும் கால்வாய்க்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், அப்போதும் வேலை ஆமை வேகத்தில்தான் நகர்ந்தது. அதைத் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் டெண்டர் விடப்பட்டு மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்ட்டது.
அதன்பின், அந்நிறுவனம் கால்வாயை கட்டி முடித்தது. நீர்ப்பாசனத் துறையின் கணக்கீட்டின்படி, கட்டிய கால்வாயின் மொத்த நீளம் 404.17 கி.மீ ஆகும். மேலும், ஒரு நாளைக்கு 800 கன அடி தண்ணீரை திறக்க முடியும். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1,700 கன அடி தண்ணீரை திறந்து விடலாம். ஏறக்குறைய, 42 ஆண்டுகளாக நடந்த இந்த கால்வாய் அமைக்கும் பணி நிறைவடைந்து, கடந்த புதன்கிழமை மிகப்பிரமாண்டமான வகையில் திறப்புவிழா நடத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இதனையடுத்து, கால்வாயிலிருந்து வினாடிக்கு சுமார் 800 கன அடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டவுடன், அழுத்தம் தாங்காமல் கால்வாய் உடைந்து, அருகில் உள்ள கிராமங்களுக்குள்ளும், விளைநிலங்களிலும் புகுந்து ஏராளமான பயிர்களை நாசம் செய்தது.
இந்நிலையில், கால்வாயில் எலி போட்ட துளைகள் தான் கால்வாய் உடைந்ததற்குக் காரணம் என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங், இந்த கால்வாய் உடைந்ததற்கு அதிகமான அழுத்தத்தில் தண்ணீர் வெளியேறியதே முக்கியக் காரணம் என்றும், மூத்த அதிகாரிகள் கால்வாய் உடைந்தது குறித்தும், சேதமடைந்த விளைநிலங்கள் குறித்தும் மதிப்பிட்டு வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.