காலைநிலை மாற்றம் உலகில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திவருகிறது. இதனைச் சமாளிக்கும் நோக்கில் உலக நாடுகள் பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உலக நாடுகள் அனைத்தும் கோடிக்கணக்கான டாலர்களை இதற்காக செலவழித்துவருகின்றன. இந்நிலையில், பருவநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் 16 அமைப்புகளுக்கு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஐந்தாயிரத்து 800 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
இதுகுறித்து பெசோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "கடந்த ஏழு மாத காலமாக, காலநிலை மாற்றத்திற்கு எதிராக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து போராடுபவர்களிடம், பலவற்றை கற்றுக் கொண்டுவருகிறேன். அவர்களின் செயல்பாடுகளால் நான் ஊக்குவிக்கப்பட்டுள்ளேன். எனவே, அவர்களுக்கு உதவுவதில் உற்சாகம் அடைகிறேன். பூமியைப் பாதுகாக்க துணிவான நடவடிக்கை எடுப்பது அவசியம்" எனப் பதிவிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்குள், 100 விழுக்காடு புதுப்பிக்கதக்க எரிசக்தியைப் பயன்படுத்தவும், 2040ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளிப்படுதலை பூஜ்யம் விழுக்காடாக குறைக்கவும் தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவரது நிறுவனம் தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி, 1,00,000 மின்சார வாகனங்களை வாங்கிய அமேசான் நிறுவனம், வனமேம்பாட்டு திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியது.