'லோக் நாயக்' என்று அழைக்கப்படும் ஜெயபிரகாஷ் நாராயணின் 118ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்திவருகின்றனர். பிகார் தேர்தல் பரப்புரைக்காக அந்த மாநிலத்திற்கு சென்ற பாஜக தலைவர் நட்டா, ஜெபி நிவாஸில் வைக்கப்பட்டிருந்த ஜெயபிரகாஷ் நாராயணனின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மிகச் சிறந்த தலைவரான ஜெபி. நாராயணனின் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். நான் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது, அவரின் மக்கள் இயக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஜனநாயகத்தை காப்பாற்ற புரட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்ற அவரின் அழைப்பு புதிய அத்தியாயத்திற்கு வித்திட்டது. கிராம மக்கள், விவசாயிகளின் நலனுக்காக தன் வாழ்க்கையை அவர் அர்ப்பணித்திருந்தார்.
நாட்டை கட்டமைக்க அவர் ஆற்றிய பங்கை மக்கள் எப்போதும் நினைவு கூறுவர். அவர் ஊழல்வாத காங்கிரஸ் அரசுகளை அதிரவைத்தவர்" என்றார். கயாவில் நடைபெறவுள்ள பேரணியில் கலந்து கொண்ட நட்டா, மக்களிடையே உரையாற்றினார். காந்தி மைதானத்திற்கு செல்வதற்கு முன்பு, பாட்னாவில் உள்ள அனுமன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை மேற்கொண்டார். பின்னர், கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.