370 சட்டத்தின் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனடிப்படையில் ஜம்ம காஷ்மீர், லடாக் இரண்டும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநர் நியமிக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திரா மர்மு, லடாக்கிற்கு ஆர்.கே மாத்தூர் இருவரும் துணை நிலை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து இன்றிலிருந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிகின்றது.
ஜம்மு காஷ்மீருக்கு நியமிக்கப்பட்டுள்ள துணை நிலை ஆளுநர் மர்மு, 1985ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியாவார். துணை நிலை ஆளுநராக அவரை நியமிப்பதற்கு முன்பு மத்திய நிதியமைச்சகத்தில் செலவினச் செயலாளராக பணிபுரிந்து வந்தார்.
லடாக் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மாத்தூர், 1977ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியாவார். இவர் பாதுகாப்பு செயலராகப் பணிபுரிந்து வந்தார்.
ஜம்மு காஷ்மீரில் ஆளுநராக இருந்த சத்யபால் மாலீக் கோவா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு புதிய துணைநிலை ஆளுநர்கள் நியமனம்!