பயங்கரவாத செயல்களைத் தடுக்கும் நோக்கில் காஷ்மீரில் காவல்துறையினரும், ராணுவத்தினரும் குல்சோகர் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த இரண்டு பேர், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இதில் உயிரிழந்தனர்.
இதுகுறித்து, ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் தில்பாங் சிங் கூறுகையில், “தெற்கு ஜம்மு பகுதியில் அமைந்துள்ள தோடா மாவட்டம் தற்போது பயங்கரவாதிகளற்ற மாவட்டமாக உருமாறியுள்ளது. மாவட்டத்தில் இருந்த கடைசி பயங்கரவாதியான மசூத் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த இவர், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்தது தெரியவந்தது. இவரிடமிருந்து, வெடிபொருள்கள், கைத் துப்பாக்கிகள், ஏகே 47 ரக துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன” என்றார்.