ஸ்ரீநகர்: உபர், ஓலா போன்று இந்த ஜே.கே டாக்ஸி சேவையானது, ஸ்ரீநகரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவரின் விடமுயற்சியால் உருவாகியுள்ளது.
ஸ்ரீநகரின் சனத் நகர் பகுதியைப் பூர்வீகமாக கொண்டவர் பாசில் ஷோகாட். வணிக நிர்வாக பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர் வணிக நிர்வாகம், தளவாடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவராவார்.
சுற்றுலாத் துறைக்கு பெயர் பெற்ற ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் டாக்ஸி ஓட்டுநர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதை நோக்கமாகக் கொண்டு, அவர் ஜே.கே டாக்ஸி சேவையை உருவாக்கியுள்ளதாக கூறுகிறார்.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய ஜே.கே. கேப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பாசில் ஷோகாட் கூறுகையில், " கடந்த இரண்டு ஆண்டுகளாக டாக்ஸி சேவையைத் தொடங்கும் எண்ணத்தில் தொடர்ந்து இந்த திட்டத்திற்காக பணியாற்றி வந்தேன். ஆனால் நிதி தட்டுப்பாடு, பொருளாதார சிக்கல்கள் காரணமாக, என்னால் இந்த சேவையை உடனடியாகத் தொடங்க முடியவில்லை.
இறுதியாக, இப்போது எல்லாம் நினைத்தபடி நடக்கத் தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததிலிருந்து பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, நியாயமானக் கட்டணத்தில் பயணிகளுக்குத் தொந்தரவு இல்லாத நிறைவான போக்குவரத்தை வழங்குவதே இந்த சேவையின் நோக்கமாகும்.
ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு சந்தையில் எவ்வளவு வர்த்தகம் உள்ளது என்பதை அறிவோம். அதேபோல, அவர்களது ஏகபோக உரிமையை வைத்து அவர்கள் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதையும், நாங்கள் அனைவரும் கவனித்திருக்கிறோம். இதை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
வீட்டு வாசலில் தொடங்கி பயண இறுதி இடம் வரை நாங்கள் மரியாதையான சேவையை வழங்குவோம். எங்கள் ஓட்டுநர்கள் அனைவரும் காவல்துறையினரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் பாதுகாப்புக்கு 100 விழுக்காடு உத்தரவாதம் வழங்கப்படும்.
பள்ளத்தாக்கில் சுற்றுலாவுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் வேலையில்லாமல் தவித்துவந்த பல டாக்ஸி ஓட்டுநர்களை நாங்கள் ஒருங்கிணைத்துள்ளோம். பள்ளத்தாக்கில் பாதுகாப்பான, மலிவான போக்குவரத்து சேவையை வழங்குவதற்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், 300 வண்டி உரிமையாளர்கள், ஓட்டுநர்களுடன் நாங்கள் கைகோர்த்துள்ளோம்.
ஓலா மற்றும் உபர் டாக்ஸி சேவையைப் போல் அல்லாமல், ஜே.கே. கேப்ஸ் சேவையானது ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு வகையிலும் இயங்கும். காஷ்மீர் பயணத்தில் திட்டமிட்டபடி எதையும் செய்ய முடியாது. நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் தான் நாங்கள் ஆரம்பத்தில் ஆஃப்லைன் பயன்முறையில் வண்டி சேவையைத் தொடங்குகிறோம்.
பயணம் மேற்கொள்ள விரும்புவோர் செய்ய வேண்டியது எங்கள் கட்டணமில்லா எண்ணை அழைத்தால் போதும், வண்டி அவர்களது வீட்டு வாசலை எட்டும். உங்களது பயண இலக்கு அல்லது பிக் அப் பாயிண்ட் குறித்து சொன்னால் போதும். அக்டோபர் மாதத்திற்குள் எங்கள் நிறுவனத்தின் கைப்பேசி செயலி பயன்பாட்டுக்கு வரும்.
2 ஜி வேகத்தில் சீராக செயல்படும் வகையில் இந்தப் பயன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, வாடிக்கையாளர்கள் எந்த பயன்முறையை பயன்படுத்தி நகரத்தில் எங்கும் பயணம் செய்யலாம். முதல்கட்டமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.14 கட்டணம் என தொகை முடிவு செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.
அண்மையில், ஊடகங்களைச் சந்தித்த ஜம்மு-காஷ்மீரின் போக்குவரத்துத் துறையின் முதன்மை செயலாளர் (ஜே.கே.ஏ.ஏ.பி.எஸ்) அஸ்கர் சமூன், ஓலா மற்றும் உபர் வடிவில் ஜம்மு-காஷ்மீரில் டாக்ஸி சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்தது கவனிக்கத்தக்கது.