மகர சங்கராந்தி திருநாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் சித்தூரில் எருது விடும் விழா நடந்தது. முன்னதாக எருதுகளை உரிமையாளர்கள் அலங்கரித்தனர். அதன் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசப்பட்டன.
மேலும், அந்த கொம்புகளில் தங்களுக்கு பிடித்த கடவுளர்களின் பெயர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
இந்நிலையில் எருது விடும் விழா நடந்தது. சீறிப் பாய்ந்து வரும் எருதுகளை, காளையர்கள் அடக்கி அதன் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை பறித்தனர். இந்த விளையாட்டில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஏராளமானோர் தங்களின் வீடுகளின் மொட்டை மாடிகளில் அமர்ந்தபடி ரசித்தனர். காளையர்களின் கைகளுக்கு அகப்படாமல் கைகள் சீறிப் பாய்ந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள், ஆந்திராவில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த திருநாளின் மூன்றாவது நாள் சித்தூரில் எருது விடும் விழா நடக்கும்.
பொங்கல் திருநாளன்று தமிழ்நாட்டிலும் எருது விடும் விழா, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குஜராத்தின் உலகப் புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா!