உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பால் இதுவரை 210க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 27 லட்சத்து 37 ஆயிரத்து 866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது. சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, இந்தியா என உலகின் பல பகுதிகளில் பரவி தீவிரமடைந்துக் கொண்டிருக்கிறது.
கோவிட்-19 வைரஸ் பரவலை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டுமென ஐ.நா மன்றம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரேசிலிய பிரதிநிதி எர்னஸ்டோ அராஜோ ஆகியோருடன் தொலைபேசி உரையாடலை நடத்தினார்.
இதனையடுத்து, ஓமானின் வெளியுறவுத் துறை அமைச்சர் யூசுப் அலவி, சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் சவுத் அல்-பைசல் ஆகியோருடனும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இரு நாடுகளிலும் வாழும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதற்கு இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோவுடனான தனது பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருடன் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து பேசியதாகவும், அமெரிக்கா இந்தியா ஆகிய இருநாடுகளும் கரோனா வைரஸ் நெருக்கடியில் மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் விவாதித்தாக அறிய முடிகிறது.
பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் காணொலி சந்திப்பில் எதிர்வரும் கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அதிகார வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : இண்டு இடுக்குகளில் உள்ள கரோனா வைரஸை அழிக்க உதவும் புற ஊதாக் கதிர் ட்ராலி