பக்ரைனின் பிரதமரும் இளவரசருமான கலிபா பின் சல்மான் அல் கலிபா (84) நவ.11ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். 1970ஆம் ஆண்டு முதல் பக்ரைன் பிரதமராகப் பதவி வகித்து வந்த இவர், உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையையும் பெற்றவர்.
இவரின் இறப்புக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் தங்களின் இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர். அந்த வரிசையில் இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது இரங்கலைப் பதிவுசெய்துள்ளார்.
இந்தியாவிலுள்ள பக்ரைன் தூதரகத்தில் இருக்கும் இரங்கல் புத்தகத்தில் தனது கையெழுத்தைப் பதிவுசெய்ததாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர், “நீண்ட நாள்களாகப் பிரதமராகப் பதவிவகித்த கலிபா பின் சல்மான் அல் கலிபா பக்ரைனின் முன்னேற்றத்திற்காக இந்தியாவுடன் அதிகமாக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார். அவர் பக்ரைனின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டிருக்கிறார். அவர் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று” எனக் கூறியுள்ளார்.