முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசுயா, உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெகத்ரட்சகனின் இல்லத்திற்கு நேரில் சென்று, மறைந்த அனுசுயா உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ” அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசுயா, உடல் நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெகத்ரட்சகன் இல்லற வாழ்வின் ஒளிமிகு தீபமாகவும், அன்பிற்கும், பண்பிற்கும் மணிமகுடமாகவும் விளங்கியவர் அனுசுயா அவர்கள். எப்போது சென்றாலும் கலைஞர் மீதும், என் மீதும், தனிப்பட்ட பாசமும் அன்பும் காட்டி உபசரித்து நேசித்தவர். ஜெகத்ரட்சகனின் வாழ்வின் அச்சாணியாகவும், அரசியல் பயணத்திலும் மக்கள் சேவையிலும் உற்சாகமளிக்கும் மிகப்பெரும் உந்து சக்தியாகவும் திகழ்ந்தவர் “ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இலங்கை கடற்படைத் தாக்குதல் - வைகோ கண்டனம்