டெல்லியின் வடகிழக்குப் பகுதியான மவூஜ்பூரில் கடந்த 24ஆம் தேதி வன்முறைச் சம்பவம் நடந்தது. அப்போது காவல் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்நிலையில் சிவப்புச் சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் காவலர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். இதுதொடர்பான புகைப்படங்கள், காணொலிக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரை காவலர்கள் தேடிவந்தனர். இந்த நிலையில் அவர் உத்தரப் பிரதேசத்தில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டெல்லி குற்றப்பிரிவு காவலர்கள், உத்தரப் பிரதேசம் விரைந்து அவரைக் கைது செய்தனர்.
காவலர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் ஷாரூக் என்ற இளைஞர் ஆவார். இது குறித்து டெல்லி காவலர் தீபக் தஹியா கூறுகையில், 'நான் லத்தியால் அவரை பயமுறுத்த முயன்றேன். ஆனால், அவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்’ என்றார்.
டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் மூன்று நாட்களாக எழுந்த வன்முறையில் சுமார் 200 பேர் பலத்த காயம் அடைந்தனர். தலைமைக் காவலர் (ஹெட் கான்ஸ்டெபிள்) மற்றும் புலனாய்வு அலுவலர் (ஐபி) அங்கித் சர்மா உட்பட 46 பேர் இறந்துள்ளனர். வன்முறை குறித்து விசாரிக்க டெல்லி காவல் துறை குற்றப்பிரிவின் கீழ் இரண்டு சிறப்பு புலனாய்வு குழுக்கள் (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : டெல்லியில் மோடி கெஜ்ரிவால் சந்திப்பு