ஜம்மு காஷ்மீர், ராஜோரி மாவட்டத்தில் உள்ள தன்னா மண்டி தெஹ்ஸிலில் உள்ள மலைப்பாங்கான பகுதியைச் சேர்ந்தவர் கவுஹர். இவர் எந்தவொரு பயிற்சி உதவியும் இல்லாமல் காஷ்மீர் நிர்வாக சேவைகள் போட்டித் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே 29ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
தனது ஆரம்பக் கல்வியை பெஹ்ரோட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்த இவர், பின்னர் பட்டப்படிப்புக்காக தன்னா மண்டிக்குச் சென்றார்.
அறிவியலில் இளங்கலை முடித்த போதிலும், சமூகவியலை காஷ்மீர் நிர்வாக சேவைகள் நுழைவுத் தேர்விற்கான விருப்பப் பாடமாக இவர் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், இது தன்னைச் சுற்றி நிகழும் சமூகப் பிரச்னைகளை அறிந்து கொள்ள உதவியாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து, நகரில் உள்ள பல மாணவர்களும், இவரிடம் போட்டித் தேர்விற்கான பயிற்சிகளைப் பெறவும், பாடங்களில் உள்ள சந்தேகங்களை போக்கிக் கொள்ளவும் வருகை தருகின்றனர்.
போட்டித் தேர்வில் வெற்றிபெற்றது குறித்து கருத்து தெரிவித்த கவுஹரின் தந்தை ஃபாரூக் சாந்த், "காஷ்மீர் நிர்வாக சேவைகளுக்கு தகுதி பெறுவது எனது குழந்தைப்பருவ கனவு. ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. இருப்பினும், எனது மகன் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். நான் அவரை எண்ணி பெருமைப்படுகிறேன். கடவுளுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.