கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் குப்பைப் பொருட்களில் இருந்து கலைப்பொருட்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தின் பெஹ்ராம்பூர் நகரில் அரசின் தொழிற்சாலை தொழில்நுட்ப கல்வி இயக்கத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர் பானி புயலால் கைவிடப்பட்ட இரும்பு பொருட்களைக் கொண்டு சில பிரமாண்ட பொருட்களை உருவாக்கிவருகின்றனர். ஐடிஐயின் ஐந்து பிரிவுளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த மூன்று மாதங்களாக இந்த பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் இதுவரை 70 அடி உயர கிட்டார், பெரிய அளவிலான மீன், ஒட்டகச்சிவிங்கி போன்றவற்றையும் வடிவமைத்துள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதை வலியுறுத்தும் நோக்கிலும், கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கிலும் இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் ஐடிஐ நிறுவனம் அருகாட்சியகம் ஒன்றை திறக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இதுபோன்று அனைவரும் குப்பைப் பொருட்களை மாற்று வழியில் பயன்படுத்த ஆரம்பித்தால் தேவையில்லா கழிவுகளை ஒழிக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.