இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சமீபத்திய மோதல்களில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் விளைவாக இந்தியாவில், சீனாவை புறக்கணிப்பதற்கான குரல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தும், சீனத் துருப்புக்களின் மிருகத்தனமான செயலைக் கண்டித்தும் நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தும் வருகின்றன.
சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக சார்பு மிகப் பெரியது. இந்தியாவின் முன்னணி வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்றாக சீனா இருப்பதால், 2019 - 20ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சீனாவின் பங்கு முறையே 9% மற்றும் 18% ஆகும்.
ஆனால் சீனா பல வழிகளில் இந்தியாவுக்கு துரோகம் இழைத்துள்ளதால், நாட்டின் வர்த்தக உறவுகள் மற்றும் புவிசார் அரசியல் அமைப்பானது பெரிய மாற்றத்தை காணப் போகிறது. கரோனா தொற்று பரவி, உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நடந்த வன்முறையே, சீனாவுடனான வர்த்தக உறவுகளை தடை செய்ய இந்தியாவை நிர்பந்தித்தது.
முக்கியமான பொருட்களின் இறக்குமதிகளுக்கு சீனாவை சார்ந்திருக்கும் முக்கியத் துறைகளின் எண்ணிக்கை இரு தரப்பினரையும் பாதிக்கிறது. இறக்குமதிக்கு சீனாவை அதிகம் நம்பியுள்ள பல துறைகளில், மருந்துத் துறை மிகவும் பாதிக்கப்படும். மருந்துப் பொருட்களில் அதிக சுய சார்பு கொள்ள இந்தியா ஒரு புதிய கொள்கையை அறிவித்திருந்தாலும், அதற்கு அதிக காலம் எடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈடிவி பாரத்திடம் இது குறித்துப் பேசிய இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் குமார் மதன், “ஒற்றை மருந்து மூலப் பொருட்கள் (ஏபிஐ) க்காக 70% தேவைகளை சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பு பொருட்களைப் பொறுத்தவரை, சீனாவை 92 - 99% வரை இந்தியா சார்ந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ”தற்போது பொருட்கள் கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலைப்படுகிறோம். இது ஒற்றை மருந்து மூலப் பொருட்களின் உடனடித் தேவையைக் கொண்ட சில நிறுவனங்களுக்கு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி, ஏற்றுமதி அல்லது உள்நாட்டு சந்தையை பாதிக்கும். பொருட்கள் துறைமுகத்தில் உள்ளதால் இது ஏற்றுமதிக்கான உற்பத்தியை பாதிக்கிறது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவின் மருந்துத் தொழிலுக்கு மாற்று வழிகள் இல்லை. ஏனென்றால் நாம் அதிக பணம் செலவழித்தாலும், அதே மூலப்பொருட்களை மற்ற இடங்களிலிருந்து பெற முடியாது. ஐரோப்பாவிலிருந்து சில பொருட்களை அதிக விலைக்கு நாம் வாங்கினாலும் அவற்றின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம், ஏனெனில் இந்தியாவின் தேவை என்பது அதன் கூடுதல் திறன்களை உருவாக்குவதை விட மிக அதிகமாக இருக்கும் ” என்றும் மதன் சுட்டிக்காட்டுகிறார்.
”இந்திய மருந்துத் தயாரிப்பாளர்கள் ஒற்றை மருந்து மூலப் பொருட்களுக்காக சீனாவை பெரிதும் நம்பியுள்ளனர். ஆயினும்கூட, சீன மருந்து தொடர்பான தயாரிப்புகளுக்கு இறக்குமதி தடையானது விநியோக சங்கிலியில் இடையூறுகளுக்கு வழி வகுக்கும்.
மருத்துவத் துறை மற்ற துறைகளிலிருந்து வேறுபட்டது, அது சீனாவை மிகவும் சார்ந்துள்ளது. மொத்த உலக சந்தையிலும் மூன்றில் இரண்டு பங்கு இரசாயனப் பொருட்களின் சந்தை சீனாவின் வசம் உள்ளது. மேலும் ஒற்றை மருந்து மூலப்பொருட்களின் 65 - 70 விழுக்காடு முக்கிய மருந்துகள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது, இந்திய மருந்து நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கடமைகள் நமக்கு உள்ளன” என ஃபார்மெக்ஸில் நிறுவனத்தின் இயக்குநர் ரவி உதய் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
“இருப்பினும், இப்போது வரை சீனாவுக்கு மாற்று எதுவும் இல்லை. ஆனால் இறக்குமதி சார்பு நிலையை குறைப்பதற்காக, மருந்துத் துறையை ஆதரிக்கும் திட்டங்களை, ஒரு தொகுப்பு திட்டம் உள்பட, அரசாங்கம் கொண்டு வருகிறது. இதில் ஒவ்வொரு தொகுப்பிற்கும் 1,000 கோடி ரூபாய் அரசு வழங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இது நடைமுறைக்கு வர சிறிது காலம் ஆகும்". என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஒற்றை மருந்து மூலப் பொருளின் ஏற்றுமதி கொள்கையையும் அதன் உருவாக்கத்தையும் அரசாங்கம் சமீபத்தில் திருத்தி, அவற்றின் மீதான ஏற்றுமதித் தடையை நீக்கியது. உலக அளவில் அதிகமான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உற்பத்தி செய்யும் மற்றும் ஏற்றுமதியாளராகவும் இந்தியா உள்ளது. இது மலேரியாவுக்கான ஒரு பழைய மற்றும் விலையுயர்ந்த மருந்து ஆகும். உலகம் முழுவதிலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் விநியோகத்தில் 70 விழுக்காடு வரை இந்தியா உற்பத்தி செய்கிறது.
இந்தியாவின் மருத்துவத் துறையில் 2-3 மாதங்களுக்கு போதுமான இருப்புகள் உள்ளன, ஆனால் ஒரு மாற்று பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு வேளை இந்தியா சுய சார்பாக மாறுவதாக இருந்தால், தற்போதைக்கு அது மிகக் கடினமான விஷயமாகும். இலக்கை நோக்கி நாம் தொடர்ந்து பணியாற்றினால் சுய சார்படைய குறைந்தது 8-10 ஆண்டுகள் ஆகலாம்.
ஒற்றை மருந்து மூலப் பொருட்கள் தவிர, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கிய ஆரம்பப் பொருட்கள் நமக்கு தேவை. இந்தியா மட்டுமல்ல, மருந்தை உற்பத்தி செய்யும் மற்ற எல்லா நாடுகளும் சீனாவை நம்பியுள்ளன, அமெரிக்காவும் இதற்கு விதி விலக்கல்ல. யதார்த்தத்திலிருந்து தப்பிக்க முடியாது. நாம் தன்னிறைவு அடைய முயற்சித்தால், நமது விநியோக தளத்தை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியம்” என்று மதன் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும். ரசாயனங்கள், வாகன உதிரி பாகங்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் மருந்துகள் போன்ற துறைகளில் இந்தியாவின் இறக்குமதியில் கிட்டத்தட்ட 12% பங்கைக் சீனா கொண்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜே.எம்.பைனான்சியல் இன்ஸ்டிட்யூஷனல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்டின் கருத்துப்படி, இந்திய மருந்துத் தயாரிப்பாளர்கள் ஒற்றை மருந்து மூலப் பொருட்களை 70% இறக்குமதி செய்கிறார்கள். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிம் தேவைகள் 2012 இல் 62 சதவிகிதமாக இருந்தது. 2019இல் 68 சதவிகிதமாகவும் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. தற்போது சீனப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்தால், பாதகமான விலை உயர்வுக்கு அது வழி வகுத்து, உள்நாட்டு நிறுவனங்களுக்கான செலவுகளை அதிகரிக்கும்.
திங்களன்று, சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளை நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆபத்தானவை என்று கூறி இந்தியா தடை செய்தது இங்கே நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: எங்கள் நிறுவனங்களுக்கு இந்தியா பாகுபாடு காட்டக்கூடாது - சீனா