சந்திரயான் 2 விண்கலத்தின் 'விக்ரம்' லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் சவாலான பணியை இஸ்ரோ நேற்று நள்ளிரவு 1:30 மணியளவில் மேற்கொண்டது.
அப்போது, எதிர்பாராதவிதமாக 'விக்ரம்' லேண்டருடான இஸ்ரோவின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து 'விக்ரமை' தொடர்புகொள்ள இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளும் பலனிக்கவில்லை.
இது குறித்து இஸ்ரோ தலைவர் கே. சிவன் தூர்தர்ஷனுக்கு பேட்டியளிக்கையில், "விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க நான்கு கட்டங்களில் செயல்பட்டோம். இதில், கடைசி கட்டத்தை சரியாக செயல்படுத்த தவறியதால், விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்துவிட்டோம்.
அடுத்து 14 நாட்களில் விக்ரமுடன் தொடர்புகொள்ள முயற்சிப்போம். இதற்கு சந்திரயான் 2இன் ஆர்பிட்டாரையும் (வட்டமடிப்பான்) நாங்கள் பயன்படுத்தவுள்ளோம். ஆர்பிட்டாரில் கூடுதலாக எரிவாயு (Fuel) மிச்சமுள்ளதால், ஓராண்டிற்கு பதிலாக ஏழரை ஆண்டு செயல்படவுள்ளது" என்றார்.
மேலும், சந்திரயான் 2 திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு தங்களுக்கு உற்சாகமளித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த கே.சிவன், அடுத்தடுத்த மாதங்களில் ககன்யான் (விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பும் இந்தியாவின் கனவுத் திட்டம்) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம் என்றார். சந்திரயான் 2 திட்டம் இவற்றை எந்த விதத்திலும் பாதிக்காது என்று சிவன் உறுதிபடத் தெரிவித்தார்.