நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் உருவாக்கப்பட்டது. கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் சுற்றுப்பாதையில் சுற்றி தனது இறுதிப்பணியான லேண்டரை தரையிறக்கும்போது நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிமீ தொலைவிலிருந்தபோது விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
தொடர்பு துண்டிக்கப்பட்ட லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டனர். விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் விக்ரம் லேண்டர் குறித்து தெரிவிக்கையில், "விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை என்றாலும் ஆர்பிட்டர் நன்றாக வேலை செய்துவருகிறது. ஆர்பிட்டரில் உள்ள எட்டு தொழில் நுட்பங்களும் அதன் வேலையை சிறப்பாகச் செய்கிறது. எதனால் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.
மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு தற்போது முன்னுரிமை அளித்து வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டம்: இஸ்ரோ-டி.ஆர்.டி.ஓ. இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்