சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வேறு எந்த நாடும் செய்யாத புதுமையான சாதனையாக, சந்திரயான்-2 நிலவின் தென் துருவத்தை ஆராயும் வகையில் தயாரிக்கப்பட்டது. சந்திரயான்-2 ஏவப்பட்ட நாளிலிருந்து சரியாக 48 நாட்களில் நிலவின் தென் துருவத்தை அடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
![இஸ்ரோ வெளியிட்ட நிலவின் இரண்டாவது புகைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4248577_yha.png)
இந்நிலையில், சந்திரயான்-2 புதிதாக எடுத்த நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. மேலும், இந்த புகைப்படமானது ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பிலிருந்து 4375 கி.மீ., தூரத்தில் இருந்து எடுக்கப்பட்டது எனவும்; சந்திரயான்-2வின் டெரய்ன் மேப்பிங் கேமரா-2 மூலம் எடுக்கப்பட்ட நிலவின் வடதுருவத்தின் புகைப்படம் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
![இஸ்ரோ வெளியிட்ட நிலவின் இரண்டாவது புகைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4248577_hys.png)
இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று நிலவின் 2650 கி.மீ., தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டிருந்தது.
நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-2 செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி அடையும் என ஏற்கனவே இஸ்ரோ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.