புதுச்சேரியை சேர்ந்த மக்கள் வெளிமாநிலத்திற்கு அனுமதியோடு சென்று வந்தாலும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர் வெளியிட்ட காணொலியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அதில் கூறுகையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேரின் உடல் நலம் சீராக உள்ளது. புதியதாக மருத்துவ அலுவலர்கள் 17 பேருக்கு உமிழ் நீர் பரிசோதித்ததில் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுச்சேரியில் கரோனா தொற்று தாக்கம் பற்றியும் மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டார்கள். மாநில எல்லையை முழுமையாக மூடி, அனைத்து துறையைச் சேர்ந்தவர்களும் இரவு பகல் பாராமல் பாடுபடுபட்டு வருகின்றார்கள்.
தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு இருந்தாலும், புதுச்சேரியில் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது என்று கூறினேன். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்நேரத்தில் தேவையில்லாமல் வெளிமாநிலத்திற்கு செல்வதை தடுக்கவும், வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை தடுக்கவும் முடிவு எடுத்துள்ளோம்" இவ்வாறு அவர் காணொலியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேனியில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஓபிஎஸ் ஆய்வு!