உத்தரப் பிரதேச மாநிலத்தின் புந்தல்கண்ட் பகுதிக்கு அருகில் உள்ளது, சித்ரகூட். இங்கு சுரங்கப் பணிகள் அதிகமாக நடந்து வரும் நிலையில், வாழ்வாதாரத்திற்காக சிறுமிகள் சுரங்க வேலைகளுக்குச் செல்கின்றனர்.
அப்படி வேலைக்குச் செல்லும் சிறுமிகள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வரும் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் பற்றி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ''கரோனா வைரஸால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டமிடப்படாத ஊரடங்கின் காரணமாக, அந்தக் குடும்பம் பசியால் வாடி வருகிறது. தற்போது இந்தச் சிறுமிகள் வாழ்வாதாரத்திற்காக பயங்கரமான விலையைக் கொடுத்துள்ளனர். இதுதான் நாம் கனவு கண்ட இந்தியாவா?'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிராக அதிகக் குற்றங்கள் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றி பிரியங்கா காந்தி கூறுகையில், மாநிலத்தில் நடக்கும் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றங்களை மறைக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க: விகாஸ் துபே கூட்டாளிகள் நான்கு பேர் கைது: 14 துப்பாக்கிகள் பறிமுதல்!