கரோனா பெருந்தொற்றால் நாடு பெரும் பேரழிவை சந்தித்துவரும் சூழலில், ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் மோடி வெளியிட்ட அறிவிப்புகள் நம்பிக்கையை விதைத்துள்ளன. கரோனா வைரஸ் நோயால் பல நாடுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து பல்வேறு துறைகள் தேக்கநிலையை அடைந்தன. இதனிடையே, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.
இச்சூழலைக் கட்டுப்படுத்த எம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பு நிபுணர்களிடமிருந்தும் அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 20 லட்சம் கோடி மதிப்பிலான ஊக்குவிப்பு திட்டத்தை பயன்படுத்தி கரோனா பெருந்தொற்று பேரிடரை, தற்சார்பு நாடாக்குவதற்கான வாய்ப்பாக உருவாக்க முடியும் என பிரதமர் மோடி அறிவித்தார். விரிவான பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன சீர்திருத்தம், இளைஞர்களை வலுப்படுத்துதல், தேவை மற்றும் விநியோகத்தை நிலைநிறுத்துதல் போன்ற ஐந்து தூண்களை மேம்படுத்துவதன் மூலம் தற்சார்பு இந்தியாவை அடையலாம் என அவர் தெரிவித்தார்.
ஐந்து முக்கிய துறைகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்த நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு தற்சார்பு என்னும் கனவை அடைய முற்பட்டாலும் தற்போதைய பிரச்னைகளை தீர்க்கும் வகையில் அமையவில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடான 20 லட்சம் கோடி ரூபாயில் மத்திய அரசின் பங்கானது 1.1 விழுக்காடாகும் , அதாவது 2.17 லட்சம் கோடி ரூபாயாகும். பல்வேறு துறைகள் பாதிப்புக்குள்ளானது அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தாலும், பெரும் தொழிற்சாலைகளை மறந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மீது இரக்கம் காட்டப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 130 கோடி பேரை மீட்க இந்த ஊக்குவிப்பு திட்டம் எந்தளவுக்கு உதவும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கரோனா ஏற்படுத்தும் தாக்கம் பல போர்களால் நிகழும் அழிவுக்கு நிகராக இருக்கும், உலகத்தின் ஜிடிபியில் 10 விழுக்காடு பாதிப்பு ஏற்படுத்தும், 24.2 பில்லியன் மக்கள் வேலையை இழப்பர் என ஏசியன் டெவலப்மென்ட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டுப்பாடுகள் அமலில் உள்ளபோதே, உற்பத்தி குறைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஓரளவுக்கு சரி செய்யும் வகையில் ஊரடங்கை மூடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிக பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும்படி மத்திய அரசுக்கு நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.
ஆனால், அரசு அதனை ஏற்கவில்லை. அதற்கு பதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க அரசு முடிவெடுத்தது. மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூன்று லட்சம் கோடி மதிப்பில் உத்திரவாதம் இல்லாத வங்கி கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இம்மாதிரியான சூழலில், கடன் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நான்கு ஆண்டிலிருந்து பத்தாண்டுகளாக உயர்த்திருக்க வேண்டும். ஏழைகளின் வங்கி கணக்குகளில் 33,176 கோடி ரூபாய் பணபரிமாற்றம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த தொகையை வைத்து ஒரு சிறு உதவி கூட ஏழைகளுக்கு செய்ய முடியாது. மதுபானக் கடைகள் திறந்ததன் மூலம் அறிவிக்கப்பட்ட மக்கள் நல திட்டங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனது. வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு சென்றுள்ள நிலையில், வேலைவாய்ப்பு உத்திரவாத பணிக்காக மத்திய அரசு கூடுதலாக 40,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. உற்பத்தி, கடன் ஆகியவற்றில் கவனம் செலுத்திய மத்திய நிதியமைச்சர் தேவையின் வளர்ச்சி குறித்து மறந்து விட்டார் போலும். கொள்கையை வகுப்பது தாக்கத்தை உண்டாக்கும் வகையில் இருந்தால்தான், தற்சார்புள்ள இந்தியாவை அடைய முடியும்.
இதையும் படிங்க: ஆயுஷ்மான் பாரத்... 1 கோடியைத் தாண்டிய பயனடைந்தோர்: மோடி பெருமிதம்