ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இது தவிர இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகள் ஈரானிடம் இருந்து பெட்ரோலியப் பொருட்களை வாங்கக் கூடாது என்றும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் கடந்த மே 2ஆம் தேதி முதல் இந்தியா ஈரானிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதை நிறுத்தியது.
இதில் ஈரானிடமிருந்து அதிகப்படியான எண்ணெய் பொருட்களை உற்பத்தி செய்துவரும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா தனது 80 சதவிகித எண்ணெய் பொருட்கள் தேவையை இறக்குமதியின் மூலமாகவே நிவர்த்தி செய்துவருகிறது.
இந்நிலையில், ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சரான முகமது ஜாவித் ஜாரிஃப் இரண்டு நாள் அரசு முறை பயணமக நேற்றிரவு டெல்லி வந்தடைந்தார். அவர் இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவாராஜை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தச் சந்திப்பின்போது இந்தியாவுடன் மீண்டும் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா விதித்த தடையை தொடர்ந்து ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரூகானி அறிவித்த நிலையில் இன்று நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.