டெல்லி: நாட்டின் ஆறாவது மிகப்பெரிய பாதுகாப்பு படையாக எல்லை பாதுகாப்பு படை விளங்கிவருகிறது. இதில் இரண்டு லட்சத்து 65 ஆயிரம் வீரர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான எல்லை பகுதிகளை எல்லை பாதுகாப்பு படை பாதுகாத்துவருகிறது. இதன் 27ஆவது தலைமை இயக்குநராக ராகேஷ் அஸ்தானா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
செயின்ட் ஜான் கல்லூரியில், வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற இவர், 1984ஆம் ஆண்டு ஐபிஎஸ் அலுவலராக பணியில் சேர்ந்தார். குஜராத் காவல்துறையில் வதோதரா மற்றும் சூரத் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
மேலும், மத்திய புலனாய்வுப் பிரிவில் காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆய்வாளர், கூடுதல் இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
இதற்கு முன்பு, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் கூடுதல் பொறுப்போடு சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பணியகத்தின் தலைவராகவும் இருந்தார்.
ராகேஷ் அஸ்தானா 2001 ஆம் ஆண்டில் சிறப்பான சேவைகளுக்கான காவலர் பதக்கத்தையும், 2009ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பதக்கத்தையும் பெற்றவர் ஆவார்.
இதையும் படிங்க: பெங்களூருவில் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கைது!