ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் எனக் கூறி ஐந்து நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்க டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, ஐந்து நாட்களுக்குப் பதிலாக மூன்று நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி சிறப்பு நீதிமன்ற விதித்திருந்த சிபிஐ காவல் இன்றோடு நிறைவடைந்த நிலையில், இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், ப.சிதம்பரத்திற்கு 74 வயது ஆவதால் அவரை நீதிமன்ற காவலில் வைக்காமல் வீட்டுக்காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து, ப. சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க தடைவிதித்தும், அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அவரது சிபிஐ காவல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிதம்பரத்தை கைது செய்வதிலிருந்து இடைக்கால தடைவிதிக்க உரிய நீதிமன்றத்தை நாடக் கோரி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.