ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 74 வயதான காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை அமலாக்கத் துறையினர் அக்டோபர் 16ஆம் தேதி காவலில் எடுத்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் காவல் கடந்த 13ஆம் தேதியோடு முடிவடைந்தது.
இந்த நிலையில் ப. சிதம்பரம் உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பிணை மனு இன்று விசாரணைக்கு வருகிறது. மனு மீது நீதிபதி சுரேஷ் கெய்த் தீர்ப்பளிக்கவுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான ப. சிதம்பரம் மாதக்கணக்கில் சிறையில் வாடுகிறார். எனினும் அவருக்கு இதுவரை பிணை கிடைக்கவில்லை. அவர் மீது மத்திய புலனாய்வுத் துறையினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2007ஆம் ஆண்டு ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது மொரீஷியஸ் நாட்டிலிருந்து ரூ.305 கோடி அந்நிய முதலீடு ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு பெறப்பட்டது. அப்போது முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு. இந்த வழக்கில் இந்திராணி மிக முக்கிய சாட்சியாகக் கருதப்படுகிறார். தற்போது அவர் அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறிவிட்டார்.
இதையும் படிங்க: வள்ளுவரின் குறளாலேயே பாஜகவுக்கு பதிலடி! - சிதம்பரம் அடடே